உடுமலையில் மக்கள் நீதிமன்றத்தில் 277 வழக்குகளில் மொத்தம் ரூ.2 கோடியே 45 லட்சத்து 75 ஆயிரத்து 537 க்கு சமரச தீர்வு

உடுமலையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 277 வழக்குகளில் மொத்தம் ரூ.2 கோடியே 45 லட்சத்து 75 ஆயிரத்து 537 க்கு சமரச தீர்வு காணப்பட்டது.

Update: 2021-04-10 17:37 GMT
உடுமலை,

உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் உடுமலை சப்-கோர்ட்டு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ஆகிய 3 கோர்ட்டுகளில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.
உடுமலை சப் கோர்ட்டில் உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரான சப்-கோர்ட்டு நீதிபதி எம்.சுரேஷ் தலைமையில் நடந்த அமர்வில் வக்கீல்கள் சங்க முன்னாள் செயலாளர் எஸ்.செந்தில்குமார் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்.பாக்கியராஜ் தலைமையில் நடந்த அமர்வில் வக்கீல் டி.பிரபாகரன் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பி.முருகன் தலைமையில் நடந்த அமர்வில் வக்கீல் ஜே.தம்பி பிரபாகரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த 3 கோர்ட்டுகளிலும் நடந்த மக்கள் நீதிமன்ற அமர்வுகளில் மொத்தம் 574 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில் மோட்டார் வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி தொடர்ந்த 42 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 26 வழக்குகளுக்கு ரூ.1கோடியே 90 லட்சத்து 27 ஆயிரத்து 598-க்கு தீர்வு காணப்பட்டது. 82 சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில், 47 வழக்குகளில் ரூ.4லட்சத்து 39 ஆயிரத்து 539 க்கு தீர்வு காணப்பட்டது.
17 காசோலை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 7 வழக்குகளில் ரூ.35 லட்சத்து 3 ஆயிரத்து  500-க்கும், சமரசத்திற்குரிய 178 சிறு குற்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில், 168 வழக்குகளில் ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்து400-க்கும் தீர்வு காணப்பட்டது.

வங்கிகளில் கடன்பெற்று, கடன் தொகையை திருப்பிச்செலுத்தாமல் வாராக்கடனாக இருந்து வந்தவர்களின் கடன் தொகையை வங்கிகளில் செலுத்தி கணக்கை நேர் செய்வதற்காக சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண 250 பேருடைய வங்கிகடன் தொகை குறித்து பேசப்பட்டது. 
இதில் 25 பேருடைய வங்கி கணக்குகளுக்கு ரூ.14 லட்சத்து 23 ஆயிரத்து 500 க்கு தீர்வு காணப்பட்டது. இது தவிர 5 குடும்ப வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 4 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

3 கோர்ட்டுகளிலும் நடந்த அமர்வுகளில் மொத்தம் 574 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில், 277 வழக்குகளுக்கு மொத்தம் ரூ.2 கோடியே 45 லட்சத்து 75 ஆயிரத்து 537-க்கு தீர்வு காணப்பட்டது.
உடுமலையில் நடந்த மக்கள் நீதிமன்றங்களில் உடுமலை வக்கீல்கள் சங்கத்தலைவர் எஸ்.கே.ஶ்ரீதர், செயலாளர் சி.முருகானந்தம், துணைத்தலைவர் டி.கருப்புசாமி, பொருளாளர் பி.ரம்யா உள்ளிட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்