பெரியகுளம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பெரியகுளம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக்கோட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 29). இவரும், அதே பகுதியை சேர்ந்த இசைவாணி என்பவரும் காதலித்து வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த திருமணத்திற்கு சிவக்குமாரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே சிவக்குமாரின் தந்தை தங்கவேல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சிவக்குமார் மன வேதனையில் இருந்து வந்தார். மேலும் அவர் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவருக்கும், இசைவாணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் விரக்தியடைந்த சிவக்குமார் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.