சைக்கிள், லாரி மீது அடுத்தடுத்து மோதிய ஆம்புலன்ஸ்; பெண் உள்பட 2 பேர் பலி

சின்னமனூர் அருகே சைக்கிள், லாரி மீது ஆம்புலன்ஸ் அடுத்தடுத்து மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2021-04-10 16:12 GMT
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே சைக்கிள், லாரி மீது ஆம்புலன்ஸ் அடுத்தடுத்து மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். 
ஆம்புலன்ஸ்
சின்னமனூர் அருகே உள்ள கள்ளப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 65). இவரது மனைவி செல்வி (58). ராஜாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சின்னமனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும்படி டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். 
அதன்படி, நேற்று மாலை ராஜாவும், அவரது மனைவியும் ஆம்புலன்சில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். அதில் உதவியாளராக சின்னமனூரை சேர்ந்த விக்னேஷ்பிரபு என்பவரும், டிரைவராக பிரனேஷ் என்பவரும் இருந்தனர். 
2 பேர் பலி
சின்னமனூர் அருகே வேப்பம்பட்டி பிரிவு என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற காரை முந்தி செல்ல ஆம்புலன்ஸ் டிரைவர் முயன்றார். அப்போது சாலையின் குறுக்கே சீலையம்பட்டியை சேர்ந்த குருசாமி (61) என்பவர் சைக்கிளில் வந்தார். இதில், கண் இமைக்கும் நேரத்தில் அவர் மீது ஆம்புலன்ஸ் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதி நின்றது. 
இந்த விபத்தில் சைக்கிளில் வந்த குருசாமியும், ஆம்புலன்சில் வந்த செல்வியும் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோயினர். மேலும் ஆம்புலன்சில் வந்த உதவியாளர் விக்னேஷ் பிரபு, ராஜா ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 
இந்த விபத்து தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர் பிரனேஷ் மீது சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்