சேத்தியாத்தோப்பு அருகே ஊருக்குள் புகுந்த முதலை
சேத்தியாத்தோப்பு அருகே ஊருக்குள் புகுந்த முதலை பிடிபட்டது.
சேத்தியாத்தோப்பு,
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து மாடு வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ஆறுமுகம் நேற்று காலை 5 மணியளவில் மாடுகளுக்கு தீனி போடுவதற்காக கொட்டகைக்கு சென்றார். அப்போது கொட்டகையின் அருகே முதலை ஒன்று கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி அறிந்த கிராமத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
பிடிபட்டது
தொடர்ந்து போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து கயிறு மூலம் முதலையை பிடித்து கட்டினர். அந்த முதலை சுமார் 500 கிலோ எடை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சிதம்பரம் வனத்துறையினர் அங்கு வந்து, முதலையை பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வக்ரமாரி ஏரியில் விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.