நோயாளிகள் எண்ணிக்கை உயர்வு எதிரொலி: அரசு கல்லூரி விடுதி கொரோனா வார்டாக மாற்றம்

திண்டுக்கல்லில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அரசு கல்லூரி விடுதி கொரோனா வார்டாக மாற்றப்படுகிறது.

Update: 2021-04-10 13:11 GMT

முருகபவனம்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் தினமும் 4 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படுகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த மாதம் வரை தினசரி பாதிப்பு 10-க்குள் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தினமும் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது.
அதிலும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 94 பேர் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக வார்டுகள் அமைக்கும் பணி நடக்கிறது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் ஆகிய அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டு இருக்கிறது. ஆனால், இவை போதுமானதாக இல்லை. அதன்படி திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு அரசு எம்.வி.எம். மகளிர் கல்லூரி விடுதியில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 
அதன்பிறகு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்ததால் கொரோனா வார்டு மூடப்பட்டது.

கொரோனா வார்டு
 
இந்தநிலையில் தற்போது கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் மீண்டும் அங்கு கொரோனா வார்டு அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கின. இதையொட்டி சுகாதார பணியாளர்கள், அங்கு சென்று கிருமிநாசினி மருந்து தெளித்து விடுதியை சுத்தம் செய்தனர். மேலும் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன. இன்னும் ஒருசில நாட்களில் மாணவிகள் விடுதி கொரோனா வார்டாக செயல்பட தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறும்போது, பள்ளப்பட்டி அருகே வத்தலக்குண்டு பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தானியக்கிடங்கில் 150 படுக்கைகள் கொண்ட அரசு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர காந்திகிராமத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படும். மேலும் நத்தம், வேடசந்தூர் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி சிகிச்சை பிரிவு தொடங்கப்பட உள்ளது என்றார்.


மேலும் செய்திகள்