நிலக்கோட்டை வாரச்சந்தையில் கடைகள் அமைக்க கூடுதல் கட்டணம் வியாபாரிகள் புறக்கணிப்பு போராட்டம்
நிலக்கோட்டை வாரச்சந்தையில் கடைகள் அமைக்க கூடுதல் கட்டணம் கேட்டதால் வியாபாரிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
நிலக்கோட்டை :
நிலக்கோட்டையில் சனிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறும். இங்கு சிறு வியாபாரிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது வழக்கம். இந்தநிலையில் வியாபாரிகள் நேற்று காலை திடீரென எந்த கடைகளும் போடாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கூறியதாவது:-
வாரச்சந்தையில் கடை அமைக்க ரூ.70 மட்டும் கட்டணம் கட்டினோம். காய்கறி மற்றும் இதர மூட்டைகளுக்கு எந்தவிதமான கட்டணமும் கட்டமாட்டோம். இந்தநிலையில் இன்று (நேற்று) காலை கடைகள் அமைக்க சென்றபோது வாரச்சந்தையை பேரூராட்சியின் மூலமாக ஏலம் எடுத்தவர்கள் திடீரென்று கடைக்கு ரூ.100-ம், ஒரு மூட்டைக்கு ரூ.30-ம் கட்டணம் கேட்கின்றனர். இதனால் கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வியாபாரிகள் புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வாரச்சந்தை, கடைகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது.