603 படுக்கை வசதிகளுடன் 11 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்கள் தயார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 603 படுக்கைகளுடன் 11 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்கள் தயார் என்றும், தினமும் 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜவஹர் கூறினார்.;

Update: 2021-04-10 11:51 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 603 படுக்கைகளுடன் 11 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்கள் தயார் என்றும், தினமும் 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜவஹர் கூறினார். 

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூரில் கொரோனா வைரஸ்தொற்று பரவல் தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கூடுதல் அரசு தலைமைச் செயலாளர் மற்றும் போக்குவரத்துத்துறை ஆணையர் தென்காசி எஸ்.ஜவஹர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ம.ப.சிவன்அருள் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எஸ்.ஜவகர் பேசியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 7,959 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டு அதில் 7692 பேர் குணமடைந்துள்ளனர். 128 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் 139 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் 5 லட்சத்து 702 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

11 தனிமைப்படுத்தும் மையங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் கல்லூரிகள் என 11 சிறப்பு தனிமைப்படுத்தப்படும் மையங்கள் 603 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளது,  தொடர்ந்து இவைகள் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் தற்போது 108 கட்டுப்படுத்தப்பட்டு பகுதிகளில் 5405 வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. 

கொரோனா தடுப்பூசி அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 51 இடங்கில் இதுவரையில் 30,764 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது. முதல் தவணை 30,764 நபர்களுக்கும் இரண்டாம் தவணை 3428 நபர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தினமும் 5 ஆயிரம் பேருக்கு...

இனி வரும் நாட்களில் தினமும் 5 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போட நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும். 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் இலவச தடுப்பூசியினை போட்டுக்கொண்டு தங்களையும், தங்கள் குடும்பத்தையும் நோய் தாக்கத்திலிலுருந்து காத்துக்கொள்ள வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுத்திட மகளிர் சுயஉதவிக்குழுக்கள், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர்களை கொண்ட 208 கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் ஒவ்வொரு கிராமத்திலும், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் குறித்தும், நோய் தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்களுக்கு சென்று வருகின்றவர்கள் குறித்தும் நாள்தோறும் கண்காணிக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். 

முக கவசம் மற்றும் கை கழுவுவதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், காலமுறை அட்டவணைப்படி கிராமப்பகுதிகளில் அனைத்து குடியிருப்புகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ளவும், அனைத்து குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளதா என்று வீடு வீடாக சென்று ஆய்வு செய்து கண்காணிக்கும் முக்கிய பணியினை கிராம அளிவிலான குழு மேற்கொள்ள வேண்டும்.

அபராதம்

முக கவசம் அணியாமல் வெளியில் சென்றால் ரூ.200 அபராதம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை விட்டு வெளியில் வந்தால் ரூ.500, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், பொது இடங்கில் எச்சில் துப்பினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அனைத்து விதமான வணிக நிறுவனங்கள் அரசின் நிலையான வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காமல் இயங்கினால் அவற்றிற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 

பொதுமக்கள் கொரோனா குறித்து சந்தேகங்களையும், தகவல்களையும் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை எண் 04179-222111, 229008 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம். 
அனைத்து துறை அலுவலர்களும் கொரோனா தொற்று  பரவலை கட்டுப்படுத்திட ஒருங்கிணைந்து பணியாற்றி திருப்பத்தூர் மாவட்டம் தொற்று பாதிப்பு இல்லா நிலையினை எய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேஷ்பாபு, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், சுகாதார துணை இயக்குனர் செந்தில், கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருண், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் இளங்கோவன், அரசு மருத்துவமனை மருத்துவர் திலீபன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரவீன், நகராட்சி ஆணையாளர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் உள்பட பலர் கொண்டனர்.

சிறப்பு மையம்

அதைத்தொடர்ந்து திருப்பத்தூர்அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள புதிய குழந்தைகள் நலபிரிவு கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் நல சிகிச்சை சிறப்பு மையத்தினையும், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பூசி பொதுமக்களுக்கு போடும் மையத்தினையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜவஹர் பார்வையிட்டார். 

மேலும் செய்திகள்