சேலம் மாநகராட்சியில் 8 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு-ஆணையாளர் ரவிச்சந்திரன் தகவல்
சேலம் மாநகராட்சியில் 8 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளன என்று ஆணையாளர் ரவிச்சந்திரன் கூறினார்.
சேலம்:
சேலம் மாநகராட்சியில் 8 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளன என்று ஆணையாளர் ரவிச்சந்திரன் கூறினார்.
கண்காணிப்பு பணி
சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை ஆணையாளர் ரவிச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா நோய் தொற்று பரவலை தடுத்திடும் வகையில் 1,200 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு, வீடாக சென்று கொரோனா அறிகுறிகள் கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது. தொற்று உள்ளவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கட்டுப்பாட்டு பகுதி
தற்போது, மாநகராட்சி பகுதிகளில் 255 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை முடிவுற்று வீடு திரும்பியவர்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 1,604 பேர், தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
3 பேருக்கு மேல் நோய் தொற்று உள்ள முத்துநாயக்கர் காலனி, ராஜகணபதி நகர், அஸ்தம்பட்டி அங்காளம்மன் கோவில் தெரு, வாய்க்கால் பட்டறை காந்தி நகர், செவ்வாய்பேட்டை-நாராயணன் தெரு, அழகாபுரம்-கணக்குபிள்ளை தெரு, பார்வதி தெரு உள்பட மாநகராட்சியில் 8 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் முதியவர்கள், குழந்தைகள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி செயற்பொறியாளர் சிபிசக்கரவர்த்தி, சுகாதார அலுவலர் ரவிச்சந்தர், சுகாதார ஆய்வாளர் சரவணன், மருத்துவ அலுவலர் இந்துமதி உள்பட அலுவலர்கள் உடன் இருந்தனர்.