மின்வாரிய நிலத்தில் குழாய் அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் தர்ணா போராட்டம்
மின்வாரிய நிலத்தில் குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தேவூர்:
தேவூர் அருகே வேலாத்தாகோவில் பகுதியில் நீர்மின் தேக்க கதவணை உள்ளது. இந்த கதவணை பகுதியில் ஆண்டுதோறும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில நீர்த்தேக்கத்தில் இருந்து சீரங்ககவுண்டம்பாளையம் பகுதி வழியாக தனிநபர் விவசாய நிலத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழாய் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் குழாய் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நீர்மின் தேக்க கதவணை பகுதியில் மின்வாரியத்துக்கு சொந்தமான நிலத்தில் குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று அந்த பகுதி கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஊராட்சிக்கோட்டை நீர் மின்தேக்க கதவணை மின் வாரிய அதிகாரியிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.