கூலித்தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை

கூலித்தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை

Update: 2021-04-09 22:10 GMT
கத்தியால் குத்திக்கொலை
கோவை

கோவை சொக்கம்புதூரை சேர்ந்தவர் சந்துரு (வயது 28). கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று மாலை அவர் தனது நண்பர்கள் 2 பேருடன் தடாகம் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடை பாருக்கு மது அருந்த சென்றார்.

 அப்போது மது அருந்திக் கொண்டிருக்கும்போது நண்பர்களுக்கும் சந்துருவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை அங்கிருந்தவர்கள் பார்த்து விலக்கி விட்டனர்.

பின்னர் சிறிது நேரத்தில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்துருவின் நண்பர்கள் 2 பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்துருவின் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் நிலைகுலைந்து சரிந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சந்துருவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  

இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நண்பர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

அவர்களின் விவரம் குறித்து தெரியவில்லை. பட்டப்பகலில் டாஸ்மாக் மது பாரில் கூலித் தொழிலாளி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்