தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 45 வயதுக்கு மேற்பட்ேடார் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறினார்.
பட்டுக்கோட்டை,
ஏப்.10-
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 45 வயதுக்கு மேற்பட்ேடார் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறினார்.
அமைதியாக வாக்குப்பதிவு
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் கோவிந்த ராவ் நேற்று பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தஞ்சை மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் பாதுகாப்புடன், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தடுப்பூசி
தற்போது தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 68 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்களின் உறவினர்கள், பக்கத்து வீட்டாருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் 2500 பேருக்கு குறையாமல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 3 பேருக்கு அதிகமாக கொரோனா தொற்று கண்டறியப்படும் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மினி கிளினிக், தனியார் மருத்துவமனைகளில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டோர் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு
முன்னதாக மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம், கண்காணிப்பு அறை, வேட்பாளர்களின் முகவர்கள் தங்கி கண்காணிக்கும் அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம், புறக்காவல் நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகளிடம் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் பஸ்களில் ஏறி டிரைவர், கண்டக்டர், பயணிகள் முககவசம் அணிந்து உள்ளனரா என ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பாலசந்தர், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், தாசில்தார்கள் தரணிகா, ஜெயலட்சுமி, பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.