முககவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்றாத பொதுமக்கள்

ஜெயங்கொண்டம் பகுதியில் முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் சென்று வருவதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Update: 2021-04-09 20:02 GMT
ஜெயங்கொண்டம்:

முககவசம் அணியவில்லை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முககவசம் அணியாமலும் கடைவீதிகளில் சுற்றித் திரிவதை காண முடிகிறது. தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வின்றி நடந்து கொள்வதாகவும், அதனை கடைக்காரர்களும் கண்டுகொள்வதில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
கொரோனா பரவும் அபாயம்
இதற்கிடையே முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு நகராட்சியினர் மற்றும் வருவாய்த் துறையினர் அபராதம் விதித்து, எச்சரித்து வருகின்றனர். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் கொரோனா பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் சென்று வருவது வேதனை அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வின்றி இருப்பதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்