மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பாப்பாக்குடி காமராஜர் காலனி தெருவை சேர்ந்தவர் பாலகுமார் (வயது 36). இவருடைய மனைவி செல்வி(29). கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக செல்வி அதே பகுதியில் உள்ள தனது தந்தையின் வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வி, பாலகுமாருக்கு போன் செய்து குழுவுக்கு பணம் கட்ட வேண்டும் என்றும், அதற்கு பணம் கொடுக்குமாறும் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து அங்கு சென்ற பாலகுமார், செல்வியை திட்டி அருகில் இருந்த கட்டையால் தாக்கியதாகவும், மேலும் பாலகுமாரின் தம்பி மணிகண்டன், அவரது தாய் குஞ்சாய்யாள் ஆகியோரும் சேர்ந்து செல்வியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த செல்வியை உடனடியாக அருகில் இருந்த உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து செல்வி கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, பாலகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.