நெல்லையில் முக கவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு ரூ.200 அபராதம்- ரெயில்களில் கிருமிநாசினி தெளிப்பு

நெல்லையில் முக கவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. ரெயில்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Update: 2021-04-09 18:58 GMT
நெல்லை, ஏப்:
நெல்லை சந்திப்பில் முககவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ரெயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டத்திலும் ஏராளமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பஸ்கள், ஏ.டி.எம். மையங்கள் போன்றவற்றில் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். வங்கிகள், திரையரங்குகள், கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

ரெயில்களில் கிருமிநாசினி தெளிப்பு

இதேபோன்று நெல்லை ரெயில் நிலையம் வழியாக செல்கின்ற அனைத்து ரெயில்களிலும் மாநகராட்சி ஊழியர்கள், ரெயில்வே ஊழியர்கள் இணைந்து கிருமிநாசினி தெளிக்கின்றனர். ரெயில் பெட்டிகள், கதவுகள், கைப்பிடிகள், இருக்கைகள் போன்ற அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கின்றனர்.
சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

அபராதம் விதிப்பு

மேலும் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தானியங்கி உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி அமைக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்திற்குள் வரும் பயணிகள் இந்த கருவியின் அருகில் நின்று செல்லும்போது, அவர்களின் உடல் வெப்பநிலை பதிவாகி திரையில் காட்டுகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள கணினியிலும் இந்த காட்சி தெரிகிறது.

இதில் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் ெரயில் நிலைய வளாகத்துக்குள் முககவசம் அணியாமல் வந்து செல்லும் பயணிகளுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. நேற்று 10-க்கும் மேற்பட்ட பயணிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்