கொரோனா 2-ம் அலை பரவிக்கொண்டு இருப்பதால் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்

கொரோனா 2-ம் அலை பரவிக்கொண்டு இருப்பதால் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என கரூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.;

Update: 2021-04-09 18:09 GMT
கரூர்
ஆலோசனை கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கரூர் மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை பரவலை தடுப்பது தொடர்பாக தமிழக அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக முக்கியத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அனைவரையும் அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றின் 2-ம் அலை பரவ தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு வழிமுறைகளை கடைபிடித்து கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது 2-ம் அலை பரவிக்கொண்டு இருக்கின்றது. இதை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவுவதை தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் விதிவிலக்குகளுடன் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில், கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை செய்யப்படுகிறது. காய்கறிகள் மற்றும் பழவகைகள் மொத்தமாக விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் சில்லரை வியாபாரம் செய்யத் தடை செய்யப்படுகிறது. தொழிற்சாலைகள் இயங்க ஏற்கனவே அரசால் தெரிவிக்கப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். அங்கு பணிபுரியும் பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட தொழில்நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறும் தொழில்நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
முக கவசம் அணிதல்
அரசு, தனியார் பேருந்துகளில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கைகளுக்கு மட்டுமே பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும். பேருந்துகளில் பயணிகள் நின்றபடி பயணம் செய்ய அனுமதி இல்லை. பெரிய வணிக நிறுவனங்கள், வணிகவளாகங்கள், மளிகைக்கடைகள், காய்கறி மற்றும் பழக்கடைகள், உணவுவிடுதி மற்றும் தேனீர் கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களை கொண்டு இரவு 11 மணிவரை மட்டுமே இயங்கிட வேண்டும். மேலும் ஏற்கனவே அரசால் தெரிவிக்கப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவற்றில் ஏற்கனவே அரசால் தெரிவிக்கப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தும், 50 சதவீத அளவு கொண்டும் செயல்பட தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே அரசால் தெரிவிக்கப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிகவளாகத்தில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையங்குகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே அரசால் தெரிவிக்கப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உள்அரங்குகளில் மட்டும் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டும் பங்கேற்கும் வண்ணம் சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள் மற்றும் விழாக்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. திருமண நிகழ்ச்சிகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறப்பு சம்பந்தமான இறுதி ஊர்வலங்கள், சடங்குகளில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. 
விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில், பார்வையாளர்கள் அனுமதியின்றி விளையாட்டு போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படுகிறது. நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
திருவிழாக்களுக்கு அனுமதி இல்லை
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள், அந்தப் பகுதிகளிலிருந்து வெளியில் வராதவகையில், காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களைக் கொண்டு 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இந்தப் பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்தல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதோடு, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு உதவி புரிய தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள். 
காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்திடவும், வீடுவீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை தினமும் கண்காணிக்கவும், நோய்த் தொற்று ஏற்பட்டவர்களது தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பரிசோதனைகள் மேற்கொள்ளவும் காவல், சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி அமைப்புகளின் துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. அரசு மருத்துவ நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவது, கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், அரசு மருத்துவ நிலையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இரண்டு வாரத்திற்குள்ளாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள். 
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேசன், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அசோகன், கரூர் நகராட்சி ஆணையர் சுதா, மருத்துவ பணிகள் இணை இயக்குநனர் ஞானகண்பிரேம்நவாஸ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்