குளித்தலையில் அடைக்கப்பட்ட புறவழிச்சாலையை திறக்ககோரி காத்திருப்பு போராட்டம்
குளித்தலையில் அடைக்கப்பட்ட புறவழிச்சாலையை திறக்ககோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து 11-ந்தேதி திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
குளித்தலை
புறவழிச்சாலை அடைப்பு
குளித்தலை உழவர்சந்தை ரெயில்வே கேட் செல்லும் புறவழிச்சாலையின் நடுவில் உள்ள ஒரு பகுதி தனிநபர் ஒருவருக்கு சொந்தமானதாக இருந்ததால் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. நீதிமன்றம் மூலம் அந்த தனிநபருக்கு சொந்தமான இடம் அவருக்கு சுவாதீனம் எடுத்து கொடுக்கப்பட்டு அந்த வழியில் வேலி போடப்பட்டு பாதை அடைக்கப்பட்டது. இதனால் குளித்தலை நகர, குளித்தலை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலை அடைக்கப்பட்டுள்ளதால் உரிய தொகை அளித்து அந்த இடத்தை பெற்று மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தி குளித்தலை பகுதி சமூக ஆர்வலர்கள் அமைப்பினர், பல்வேறு கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட குளித்தலை பகுதி சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அடைக்கப்பட்ட புறவழிச்சாலையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ஆணைபடி அடைக்கப்பட்ட பாதையை உடனடியாக திறக்க வேண்டுமென தெரிவித்தனர். 2 நாட்களுக்குள் முழுமையான தகவல் தெரிவிக்கப்படும் என பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் கூறியதை ஏற்றுக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.
போராட்டம்
இந்தநிலையில் நேற்று நகராட்சிக்கு வந்த சமூக ஆர்வலர்கள், சில அரசியல் கட்சியினர் அடைக்கப்பட்ட பாதையை உடனடியாக திறக்க வலியுறுத்தி திறக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி நகராட்சி அலுவலக நுழைவுவாயில் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் குளித்தலை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தை
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதியம் உணவை அங்கேயே அமர்ந்து சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து இரவுவரை போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதையடுத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) அடைக்கப்பட்ட சாலையை திறக்க உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நகராட்சி சார்பில் குளித்தலை போலீசாருக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
போலீசாரின் பாதுகாப்புடன் 11-ந்தேதி காலை 11 மணிக்கு பாதை திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுவதாகவும், பாதை திறக்கப்படவில்லை எனில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.