பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2021-04-09 17:55 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோகத்தொரையில் உள்ள எதுமகண்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 40). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று 2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். 

அதனை அந்த குழந்தையின் பாட்டி நேரில் பார்த்தார். தொடர்ந்து அவர் சத்தம் போடவே திரண்டு வந்த அக்கம்பக்கத்தினர் கோபாலகிருஷ்ணனை பிடித்து ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, கோபாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், 2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோபாலகிருஷ்ணனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி அருணாச்சலம் உத்தரவிட்டார். 

மேலும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பின்னர் அவரை போலீசார் கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். அரசு தரப்பில் வக்கீல் மாலினி ஆஜரானார்.

மேலும் செய்திகள்