ஜோலார்பேட்டை பகுதியில் முக கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
ஜோலார்பேட்டை பகுதியில் முக கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
ஜோலார்பேட்டை,
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் நேற்று மாலை ஜோலார்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
மேலும் சந்தைக்கோடியூர், வக்கணம்பட்டி பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் முக கவசம் அணியவேண்டும், கடைக்கு வெளியே சானிடைசர் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வழங்க வேண்டும், முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருள்கள் வழங்கக் கூடாது என கூறி அறிவுரை வழங்கினர்.