சரக்கு வேன் டிரைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை
சரக்கு வேன் டிரைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 59). இவர் கடந்த 2017-ம் ஆண்டு குமாரமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலை வழியாக வந்த சரக்கு வேன் கருப்பண்ணன் மீது மோதியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் சரக்கு வேன் டிரைவர் தஞ்சாவூர் மாவட்டம் மெய்க்கேல்பட்டி பகுதியைச் சேர்ந்த அந்தோணிஜெரால்ட் (26) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நடைபெற்று முடிந்தது. இந்தநிலையில் நேற்று விசாரணை நடத்திய நீதிபதி பாக்கியராஜ், விபத்தை ஏற்படுத்திய அந்தோணிஜெரால்ட்டுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.