வளர்ப்பு யானைகளின் உடல் எடை குறைந்தது
பசுந்தீவன பற்றாக்குறையால் வளர்ப்பு யானைகளின் உடல் எடை குறைந்தது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
கூடலூர்,
கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு, அபயாரண்யம் ஆகிய முகாம்களில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வனத்துறையின் கால்நடை மருத்துவ குழுவினர் பணியாற்றி வருகின்றனர். தினமும் காலை, மாலை வேளைகளில் வளர்ப்பு யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து 3 மாதங்களுக்கு ஒரு முறை வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தொரப்பள்ளியில் வனத்துறைக்கு சொந்தமான எடை மையம் செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யானைகளின் உடல் எடை கணக்கிடப்பட்டது.
இந்த நிலையில் முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகளின் உடல் எடையை கணக்கிடும் பணி, தொரப்பள்ளியில் நேற்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. வனச்சரகர் தயானந்தன் முன்னிலையில் இந்தர், காமாட்சி, மூர்த்தி, கணேஷ், சுஜெய் உள்பட 18 வளர்ப்பு யானைகளின் உடல் எடையை வனவர் சந்தனராஜ் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் கணக்கிட்டனர்.
இதில் 7 யானைகளின் உடல் எடை சராசரியாக 100 கிலோ வரை உயர்ந்துள்ளது தெரியவந்தது. ஆனால் மீதமுள்ள யானைகளின் உடல் எடை குறைந்திருந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள குழாயில் இருந்து வரும் தண்ணீரை வளர்ப்பு யானைகள் துதிக்கையால் உறிஞ்சி உடல் முழுவதும் தெளித்து வெப்பத்தின் தாக்கத்தை தணித்தன. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது.
முதுமலையில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது 18 யானைகளுக்கு மட்டும் உடல் எடை கணக்கிடப்பட்டுள்ளது. 1½ வயது பொம்மி என்ற குட்டி யானைக்கு தெப்பக்காடு முகாமில் உடல் எடை கணக்கெடுக்கப்பட்டுவிடும். மஸ்து காரணமாக மீதமுள்ள வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை கணக்கிடப்படவில்லை.
இது தவிர வறட்சியான காலநிலை நிலவுவதால் பசுந்தீவன பற்றாக்குறையால் வளர்ப்பு யானைகளின் உடல் எடை குறைந்துள்ளது. மழை பெய்து வனம் பசுமைக்கு திரும்பியதும் வளர்ப்பு யானைகளின் உடல் எடை மீண்டும் அதிகரித்துவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.