சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
சேலாடா அருகே சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட சேலாடா அருகே கீரைக்கல் பகுதியில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் சிறியதாக இருந்தது. இதனால் கோவிலை விரிவுபடுத்தி பெரிதாக கட்ட பக்தர்கள் முடிவு செய்தனர். தற்போது அந்த பணிகள் முடிவுற்ற நிலையில், கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கீரைக்கல் விநாயகர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் முளைப்பாலிகை மற்றும் தீர்த்த குடங்கள் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது.
இதைத்தொடர்ந்து 5.30 மணிக்கு விளக்கு ஏற்றுதல், புனிதநீர் வழிபாடு, விமான கலசம் நிறுவுதல், முதல் கால பூஜை, திரவியாகுதி, நிரையாகுதி, பேரொளி வழிபாடு, மலர் அர்ச்சனை, திருமுறை விண்ணப்பம், திருநீறு வழங்குதல், தெய்வ திருமேனிகளை எண் வகை மருந்து சாற்றி நிலை நிறுத்துதல் ஆகியன நடைபெற்றது.
பின்னர் நேற்று காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, கோவிலை புனிதமாக்குதல், தெய்வ திருமேனிகளுக்கு காப்பு அணிவித்தல், 2-ம் கால யாக பூஜை, யாக சாலையில் இருந்து கருவறை மூல மூர்த்திகளுக்கு அருள்நிலை ஏற்றுதல், இறை வழிபாடு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
இதையடுத்து 8.30 மணிக்கு தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கீரைக்கல் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.