வந்தவாசியில், கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் பிணத்துடன் மறியல்
வந்தவாசியில் கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவரின் பிணத்தை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டைக்குள் தெருவில் ஆட்டோ டிரைவர் நசீர்கானை 10 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். நசீர்கான் பிணத்தைக் கைப்பற்றி வந்தவாசி போலீசார் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, பிரேதப் பரிசோதனை முடிந்ததும் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
பிணத்தை வந்தவாசிக்குக் கொண்டு வந்த உறவினர்கள் பழைய பஸ் நிலையம் அருகில் நடுரோட்டில் வைத்து, நேற்று முன்தினம் 9.30 மணியளவில் நசீர்கானை கொலை செய்தவர்களை உடனே கைது செய்யக்கோரி திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு அரை மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
போலீசார் விரைந்து வந்து, அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் கொலையாளிகளை கைது செய்வதாக போலீசார் கூறியதை அடுத்து சாலை மறியலை கைவிட்டனர். அதன் பின்னர் பலத்த காவலுடன் நசீர்கானின் உடலை கொண்டு சென்று உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
நசீர்கான் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கோட்டைக்குள் தெருவில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் பார்வையிட்டார்.