தீயணைப்பு துறை சார்பில் காட்டுத்தீயை அணைக்க இளைஞர்களுக்கு பயிற்சி

தீயணைப்பு துறை சார்பில காட்டுத்தீயை அணைக்க இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2021-04-09 15:26 GMT

திண்டுக்கல்:
தமிழக வனப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் காட்டுத்தீயால் அபூர்வ மூலிகைகள், மரங்கள், உயிரினங்கள் அழிந்து விடுகின்றன. இதற்கிடையே மாநிலம் முழுவதும் கோடைவெயில் கொளுத்துகிறது. எனவே, காட்டுத்தீயை அணைப்பதற்கு சமூக அக்கறையுள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும்படி, தீயணைப்புத்துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட அலுவலர் வெங்கட்ரமணன் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் ஆர்வமுள்ள இளைஞர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி திண்டுக்கல் தீயணைப்பு நிலையம் சார்பில், சிறுமலையில் காட்டுத்தீயை அணைப்பது குறித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான வீரர்கள் பயிற்சி அளித்தனர். 
இதில் காட்டுச்செடிகளை கொண்டு தீயை அணைப்பது, தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
 மேலும் காட்டுத்தீ ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்புத்துறை, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், கிராம மக்கள், தீயணைப்புத்துறையினருடன் இணைந்து காட்டுத்தீயை அணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.


மேலும் செய்திகள்