மின்சார ரெயில் மோதி 6-ம் வகுப்பு மாணவன் பலி

தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது மின்சார ரெயில் மோதி 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2021-04-09 05:04 GMT

6-ம் வகுப்பு மாணவன்

சென்னை கொருக்குப்பேட்டை அண்ணா நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவர், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ஒப்பந்தமுறையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி இந்துமதி. இவர்களுக்கு 2 மகன்கள்.

இவர்களில் மூத்த மகனான சுமன் (வயது 11), அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சுமன், அதே பகுதியில் உள்ள ஸ்டான்லி நகர் விளையாட்டு மைதானத்தில் தினமும் காலையில் கால்பந்து பயிற்சி செய்வது வழக்கம்.

மின்சார ரெயில் மோதி பலி

வழக்கம்போல் நேற்று காலையில் அவர் பயிற்சிக்காக விளையாட்டு மைதானத்துக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இதற்காக பேசின்பாலம்-கொருக்குப்பேட்டை இடையே ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி வந்த மின்சார ரெயில் சுமன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த சுமன், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தான்.

கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சுமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்