நெல்லை அருகே மனைவி- மாமியாருக்கு வெட்டு; தொழிலாளிக்கு வலைவீச்சு
நெல்லை அருகே மனைவி, மாமியாரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை, ஏப்:
நெல்லை அருகே மனைவி, மாமியாரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கூலி தொழிலாளி
நெல்லை அருகே சீதபற்பநல்லூரை அடுத்த சிறுக்கன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளப்பாண்டியன். இவருடைய மகன் சுப்பிரமணியன் (வயது 29), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (24). இவர்களுக்கு கடந்த 1½ மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
பின்னர் வரதட்சணை தொடர்பாக, கணவன்- மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்டு நந்தினி பக்கத்து ஊரான கருவநல்லூரில் உள்ள தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்று விட்டார்.
தாய்-மகளுக்கு வெட்டு
பின்னர் சுப்பிரமணியன் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனாலும் நந்தினி கணவருடன் செல்ல மறுத்து விட்டார். நேற்று முன்தினம் சுப்பிரமணியன் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைப்பதற்காக, தனது தந்தை வெள்ளப்பாண்டியனுடன் கருவநல்லூரில் உள்ள மாமனாரின் வீட்டுக்கு சென்றார்.
அப்போது நந்தினி கணவருடன் செல்ல மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன், தான் மறைத்து வைத்திருந்த களைவெட்டியை எடுத்து மனைவி நந்தினியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற மாமியார் முத்துலட்சுமிக்கும் (47) வெட்டு விழுந்தது. பின்னர் சுப்பிரமணியன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
தந்தை-மகனுக்கு வலைவீச்சு
தாய்-மகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். களைவெட்டியால் வெட்டியதில் படுகாயம் அடைந்த நந்தினி, முத்துலட்சுமி ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சுப்பிரமணியன், வெள்ளப்பாண்டியன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.