திருப்பூர் பிரிண்டிங் நிறுவன உரிமையாளர் வீட்டில் 120 பவுன் நகை ரூ.25 லட்சம் கொள்ளை
திருப்பூரில் பிரிண்டிங் நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 120 பவுன் நகை மற்றும் ரூ.25 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர். ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.;
வீரபாண்டி
திருப்பூரில் பிரிண்டிங் நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 120 பவுன் நகை மற்றும் ரூ.25 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர். ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
பிரிண்டிங் நிறுவனஉரிமையாளர்
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் சபியுல்லா இவர் திருப்பூரை அடுத்த கே.செட்டிபாளையம் மும்மூர்த்தி நகர் பகுதியில் கடந்த 19 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மும்மூர்த்திநகர் அருகே குளிக்காட்டில் சொந்தமாக பிரிண்டிங் நிறுவனம் வைத்துள்ளார். மேலும் தமிழ்நாடு மாநில அமைப்பு கபடி கழக பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால், சபியுல்லா தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி கடந்த 2-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு, சபியுல்லா தனது மனைவி ஷகிலா பேகம் (51) மற்றும் மகன் ஆஷிக் அகமது ஆகியோருடன் ஒரு காரில் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றார். தான் ஊட்டி செல்லும் விவரத்தை சபியுல்லா மும்மூர்த்திநகர் பகுதியில் குடியிருக்கும் தனது உறவினர் ஷியத்துல்லாவிடம் தெரிவித்து இருந்தார்.
120 பவுன்நகை கொள்ளை
இந்த நிலையில் ஷியத்துல்லா நேற்று காலை சபியுல்லா வீட்டின் அருகே வந்துள்ளார். அப்போது சபியுல்லா வீ்ட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஷியத்துல்லா, சுற்றுலா சென்ற சபியுல்லாவுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சபியுல்லா உடனே ஊட்டியில் இருந்து காரில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. வீட்டில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. அந்த பீரோக்களில் வைக்கப்பட்டு இருந்த 120 பவுன் நகை மற்றும் ரூ.25 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
ஹெல்மெட் அணிந்துவந்த ஆசாமிகள்
இது குறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்களும் வந்து, வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் பகுதியில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய், சம்பவம் நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து சாலையில் சிறிது தூரம் ஓடியது. அதன்பின்பு அங்கேயே நின்று விட்டது.
இதையடுத்து கொள்ளை எப்படி நடந்தது? எத்தனை ஆசாமிகள் வந்தனர் என்று அந்த வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது நேற்று அதிகாலை 2 மணிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த ஆசாமிகள் 2 பேர் வருவதும், அவர்கள் அந்த மோட்டார் சைக்கிளை சபியுல்லா வீ்ட்டின் முன்பு நிறுத்துவதும் பதிவாகி இருந்தது. அதன் பின்னர் அவர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவரை ஏறிக்குதித்து உள்ளே செல்வதும், அதை தொடர்ந்து வீட்டின் பிரதான கதவை உடைப்பதும் பின்னர் நகை பணத்துடன் திரும்பி செல்வதும் பதிவாகி உள்ளது.
ஆனால்அந்த ஆசாமிகள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண் சரியாக தெரியவில்லை என்பதும், அந்த ஆசாமிகள் ஹெல்மெட் அணிந்து இருந்ததால், அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பரபரப்பு
இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் குடியிருப்பவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுற்றுலா சென்று பிரிண்டிங் நிறுவன உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 120 பவுன்நகை மற்றும் ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.