தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. தலைமையில் ஆட்சி மலரும் நன்னிலம் அ.தி.மு.க. வேட்பாளர் காமராஜ் உறுதி
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. தலைமையில் ஆட்சி மலரும் என்று நன்னிலம் அ.தி.மு.க. வேட்பாளர் காமராஜ் உறுதி அளித்தார்.
வலங்கைமான்,
தமிழக சட்டமன்ற தேர்தல் 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வலங்கைமான் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் அமைச்சர் காமராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 300 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-
வலங்கைமான் ஒன்றியத்தில் 300 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மாற்று கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இவர்களை கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் என்ற அடிப்படையில் வரவேற்கிறேன். நன்னிலம் சட்டமன்ற தொகுதி முழுவதும் அ.தி.மு.க.வுக்கு பரவலாக ஆதரவு பெருகி வருகிறது. அனைத்து பகுதியைச் சார்ந்த பல்வேறு தரப்பினரும் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து வருகின்றனர். இதனால் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றி உள்ளேன். மக்கள் அழைத்த குரலுக்கு ஓடோடி வந்து தேவையான உதவிகளை செய்துள்ளேன். இதை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ள மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எனது வெற்றிக்கு பணியாற்றி வருகிறார்கள். தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அமையும். சாதாரண மக்களில் ஒருவராக விளங்கி வரும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். இவ்வாறு அமைச்சர் .காமராஜ் கூறினார்.
முன்னதாக குடவாசலில் இஸ்லாமிய மக்களை சந்தித்து அமைச்சர் காமராஜ் ஆதரவு திரட்டினார். அப்போது அவர் இஸ்லாமிய சகோதரர்கள் ஹஜ் பயணம் செல்வதற்கான அரசு நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. அதுபோல சிறுபான்மை மக்கள் அடக்கம் செய்யக்கூடிய இடங்களை விலையில்லாமல் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பழுதடைந்துள்ள சிறுபான்மை மக்கள் வழிபடக்கூடிய புனித இடங்களை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அ.தி.மு.க. எப்போதும் போல் சிறுபான்மையின மக்களுக்கு நண்பர்களாகவே விளங்கும் என கூறினார். அப்போது ஜமாத் நிர்வாகிகள் மற்றும் குடவாசல் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.