வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி செய்ய ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.35½ லட்சம் நிதி ஒதுக்கீடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.35½ லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-04-02 20:46 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.35½ லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
வாக்குச்சாவடிகள்
தமிழ்நாட்டில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. 
கொரோனா காரணமாக தமிழகத்தில் வாக்குச்சாவடி களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. 
அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்து 613 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது தமிழகத்தில 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் உள்ளன.
ரூ.1,300 நிதி
தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அடிப்படை வசதிகள் செய்ய தேர்தல் ஆணையத்தில் இருந்து நிதி ஒதுக்கப்படும். வழக்கமாக ஒரு வாக்குச்சாவடிக்கு ரூ.1000 ஒதுக்கப்படும். இந்த முறை இதற்கான தொகை தலா ரூ.300 உயர்த்தப்பட்டு இருக்கிறது. எனவே தலா ரூ.1,300 வீதம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கையின் படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்ய நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. வாக்குச்சாவடிகளுக்கான வழிகாட்டி குறியீடுகள் வரைதல், வாக்காளர்கள், பணியில் இருப்பவர்களுக்கு குடிதண்ணீர் வைத்தல், பாதுகாப்பு தடுப்பு கட்டைகள் அமைத்தல், மின்சார வசதி ஏற்படுத்தும் பணிகளுக்காக வாக்குச்சாவடிகளுக்கு தலா ரூ.1,300 ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
ரூ.35½ லட்சம்
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த 2 ஆயிரத்து 215 வாக்குச்சாவடிகள், புதிதாக அமைக்கப்பட்டு உள்ள 526 வாக்குச்சாவடிகள் என 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடிகளுக்கு மொத்தம் ரூ.35 லட்சத்து 63 ஆயிரத்து 300 ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் தலா ரூ.650 வீதம் மொத்தம் 17 லட்சத்து 81 ஆயிரத்து 650 முதல் கட்டமாக வழங்கப்பட்டு இருக்கிறது.
தேர்தலுக்கு வாக்குச்சாவடி அடிப்படை வசதிகள் செய்யும் தொகையை ரூ.1000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்றும், சாமியானா பந்தல் உள்ளிட்டவை அமைக்க ரூ.3 ஆயிரத்து 200 ஒதுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரிகள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்திருந்ததன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த நிதியை ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்