தஞ்சை ஒன்றிய தி.மு.க. செயலாளர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கி வைத்து இருப்பதாக புகார் வந்ததையடுத்து தஞ்சை ஒன்றிய தி.மு.க. செயலாளர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர்:
வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கி வைத்து இருப்பதாக புகார் வந்ததையடுத்து தஞ்சை ஒன்றிய தி.மு.க. செயலாளர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தி.மு.க. ஒன்றிய செயலாளர்
தஞ்சை சீனிவாசபுரத்தில் உள்ள மல்லிகைபுரத்தில் வசித்து வருபவர் முரசொலி.் தஞ்சை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரான இவருக்கு சொந்தமான வீடு தஞ்சை அருளானந்த நகரில் உள்ளது. இந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்த வீட்டிற்கு நேற்று காலை 10.30 மணி அளவில் திருச்சி வருமானவரித்துறை உதவி ஆணையர் பிரேம்கமல் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் 2 கார்களில் வந்தனர். இவர்கள் வீட்டு காவலாளியிடம் முரசொலி வீட்டில் இருக்கிறாரா? என்று கேட்டனர்.
வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
பின்னர் வீட்டில் யார் வசிக்கிறார்கள்? என கேட்டபோது அந்த வீடு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், வாடகைக்கு வேறொருவர் வசித்து வருவதாகவும், முரசொலி இங்கே வருவது கிடையாது எனவும் அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து அந்த வீட்டிற்குள் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனை 1 மணிநேரம் நடந்தது. இதையடுத்து மல்லிகைபுரத்தில் உள்ள முரசொலி வீட்டிற்கு காலை 11.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். அந்த வீட்டில் முரசொலியின் சித்தப்பா ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் அன்பழகனும் வசித்து வருகிறார்.
4½ மணிநேரம்
அந்த வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது அவர்கள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைத்து இருப்பதாக புகார் வந்ததால் சோதனை நடத்துவதாக தெரிவித்தனர். இந்த சோதனை பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற்றது.
முரசொலிக்கு சொந்தமான பூர்வீக வீடு தஞ்சையை அடுத்த தென்னங்குடி கிராமத்தில் உள்ளது. அந்த வீட்டிற்கு முரசொலியை தங்களது காரிலேயே ஏற்றிக்கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். அந்த வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று தீவிர சோதனை நடத்தினர். பிற்பகல் 3 மணி வரை இந்த சோதனை நடத்தப்பட்டது. சுமார் 4½ மணிநேரம் நடந்த இந்த சோதனையில் ஆவணங்கள், பணம் எதுவும் சிக்கவில்லை என தெரிகிறது.
சம்மன்
இருந்தாலும் சில கணக்கு வழக்கு தொடர்பாக சந்தேகம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தி கொள்ளுவதற்காக கணக்கு புத்தகங்களுடன் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு மாலை 5.30 மணிக்கு ஆஜராக வேண்டும் எனவும், இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் எனவும் முரசொலிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.