கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஊட்டி,
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. அந்த நாட்களை கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி 17-ந் தேதி தொடங்கியது.
இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயங்கள், ரோமன் கத்தோலிக்க ஆலயங்களில் தினமும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வந்தது. கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஆலயங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வந்தனர்.
சிறப்பு திருப்பலி
இந்த நிலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு ஊட்டியில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அவர், பங்கு தந்தை ஸ்தனிஸ் மற்றும் உதவி பங்கு தந்தைகள் தரையில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தனர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
சிலுவை பாடுகள்
காந்தல் குருசடி ஆலயத்தில் பங்கு தந்தை அமிர்தராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சுமந்து சென்ற சிலுவையின் சிறிய பகுதி ரோம் நகரில் இருந்து கடந்த 1939-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு குருசடி ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறது. நேற்று அந்த சிலுவை துண்டு எடுக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஊட்டி சி.எஸ்.ஐ. புனித தாமஸ் ஆலயத்தில் காலை 11.30 மணி முதல் மும்மணி நேர தியான ஆராதனை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவை பாடுகளின்போது கூறிய 7 வார்த்தைகள் குறித்து தியானிக்கப்பட்டது. இதில் பங்கு தந்தைகள் இம்மானுவேல் வேழவேந்தன், ஜெரேமியா ஆல்பிரட் மற்றும் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
ஆராதனை
குன்னூரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், பேரன் ஜோசப் ஆலயம், பாய்ஸ் கம்பெனி ஆரோக்கிய மாதா ஆலயம் போன்றவற்றில் புனித வெள்ளி ஆராதனை நடத்தப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சி.எஸ்.ஐ. வெஸ்லி ஆலயத்தில் புனித வெள்ளி ஆராதனையை போதகர் ராபின்சன் பிரபாகரன் நடத்தினார். மேலும் மும்மணி நேர தியானம் நடந்தது. சி.எஸ்.ஐ. யோவான் ஆலயம், வெலிங்டன் கேட்டில் பவுண்டு சி.எஸ்.ஐ. அந்திரேயா ஆலயம், நல்லப்பன் தெரு ஜோசப் நினைவு ஆலயம் ஆகியவற்றிலும் புனித வெள்ளி ஆராதனையும், மும்மணி நேர தியானமும் நடைபெற்றது.
ஊட்டி புனித மரியன்னை ஆலயம், புனித வெஸ்லி ஆலயம், புனித ஸ்டீபன் ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.