பனியன் நிறுவனத்தில் நடந்த பரிசோதனையில் 31 தொழிலாளர்களுக்கு கொரோனா

பெருமாநல்லூர் அருகே உள்ள பனியன் நிறுவனத்தில் நடந்த பரிசோதனையில் 31 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2021-04-02 18:48 GMT
பெருமாநல்லூர்
பெருமாநல்லூர் அருகே உள்ள பனியன் நிறுவனத்தில் நடந்த பரிசோதனையில் 31 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல்
கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றன. 
அந்த வகையில் கொரோனாவை தடுக்க தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது. இதற்காக விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு் வருகிறது.
31 பேருக்கு தொற்று
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி, வாஷிங்டன் நகரில் உள்ள, ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளி ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 
இதனை தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து  பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 2 பேர் வாஷிங்டன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், கணக்கம்பாளையம் ஊராட்சி சார்பில், சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் அந்த பனியன் நிறுவனத்தை 3 நாட்கள் மூட சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்