கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு
புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.
விழுப்புரம்,
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்காக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாசம் கடைபிடித்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பாக இயேசு, சிலுவையில் அறையப்பட்டு அவர் இறந்த நாளை புனித வெள்ளியாக கடைபிடித்து வருகின்றனர்.
புனித வெள்ளியை முன்னிட்டு விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் புனித சவேரியார் ஆலயம், விழுப்புரம் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக செல்வது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் வீதிகள் வழியாக ஊர்வலமாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதால் நேற்று ஆலய வளாகத்திலேயே கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்தபடி ஆலயத்தை சுற்றி வந்தனர்.
சிறப்பு பிரார்த்தனை
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிலுவையை சுமந்தபடி இயேசுவின் பாடுகளை அனுசரித்தனர். தொடர்ந்து, ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையிலும் கலந்துகொண்டனர். முடிவில் திருச்சிலுவை ஆராதனை நடைபெற்றது. இதிலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.