தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
தர்மபுரி செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் கார்த்திகா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தர்மபுரி,
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய 5 சட்டசபைத்தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தர்மபுரி செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளது.
அங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்ட பின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைக்கப்படும் பாதுகாப்பு அறை, வாக்குகள் எண்ணிக்கை செய்யப்படும் அறை, வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட போடப்படும் தடுப்பு வேலி, தபால் வாக்குகள் எண்ணும் அறை, வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து கலெக்டர் கார்த்திகா நேற்று நேரில் ஆய்வு நடத்தினார்.
தீவிர கண்காணிப்பு
இந்த முன்னேற்பாடு பணிகளை விரைவாக முடித்து தயார் நிலையில் வைக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தர்மபுரி உதவி கலெக்டர் பிரதாப், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நரேந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வள்ளுவன், உதவி செயற்பொறியாளர் கணேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, தாசில்தார் ரமேஷ் உள்பட தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.