சி.என்.அண்ணாதுரையின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை
திருவண்ணாமலையில் உள்ள சி.என்.அண்ணாதுரை எம்.பி.யின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். முன்னதாக பறக்கும்படையினரும் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் உள்ள சி.என்.அண்ணாதுரை எம்.பி.யின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். முன்னதாக பறக்கும்படையினரும் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பறக்கும்படையினர் சோதனை
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் வாக்குக்காக பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதைத் தடுப்பதற்காக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் தீவிரமாக சோதனை நடந்து வருகிறது.
பறக்கும் படையினருடன் இணைந்து அவர்களுக்கு வரும் தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து திருவண்ணாமலை தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், எம்.பி.யுமான சி.என்.அண்ணாதுரைக்கு சொந்தமான கலசபாக்கம் அருகிலுள்ள தேவனாம்பட்டு கிராமத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று காலை பறக்கும் படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த பறக்கும் படையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் எந்தவித பணமும், பொருளும் சிக்கவில்லை என்று திரும்பி சென்றனர்.
வருமானவரித்துறையினர்
அதனைத்தொடர்ந்து வருமான வரித்துறையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சி.என். அண்ணாதுரை எம்.பி.யின் பண்ணை வீட்டில் நண்பகல் 12 மணியளவில் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையானது பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. அப்போது சி.என்.அண்ணாதுரை எம்.பி.யிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் எந்தவித பணமும் ஆவணங்களும் சிக்கவில்லை என்று வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
இந்த வருமான வரித்துறையின் சோதனையால் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பழி வாங்கும் செயல்
வருமான வரித்துறை சோதனை நிறைவுக்கு பின்னர் சி.என்.அண்ணாதுரை எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது உறுதி என்று பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வருகிறது. இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியினர் தோல்வி பயத்தால் இன்றைக்கு தி.மு.க. தலைவருடைய உறவினர் வீடுகளிலும், சட்டமன்ற உறுப்பினர் விடுகளிலும், எனது வீட்டிலும் வருமான வரித்துறையினர் மூலம் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
சட்டமன்ற தேர்தலில் எங்களது பணியை தடுப்பதற்காகவும், எங்களது வெற்றியை தடுப்பதற்காகவும் பழி வாங்கும் செயலை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதுபோன்ற பழிவாங்கும் செயல்களால் தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.