கோவை விமான நிலையத்தின் வருமானம் 50 சதவீதம் குறைந்தது

கொரோனா பாதிப்பு காரணமாக கோவை விமான நிலையத்தின் வருமானம் 50 சதவீதம் குறைந்துள்ளது.

Update: 2021-04-02 15:16 GMT
கோவை,

கோவை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டாலும் பெரிய விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. இதற்கு காரணம் விமான நிலைய ஓடுதளம் நீட்டிக்கப்படாதது தான். 

இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி வரை கோவை விமான நிலையத்தின் வருமானம் 50 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு கொரோனா தாக்கம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. 

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது,

கடந்த 2019-20-ம் நிதி ஆண்டில் கோவை விமான நிலையத்தின் வருமானம் ரூ.23.36 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து சென்றதால் இவ்வளவு அதிக லாபம் ஈட்டப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய விமான நிலையங்களை விட கோவை விமான நிலையம் கடந்த 2019-20-ம் ஆண்டுகளில் அதிக லாபத்தை ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆண்டில் கோவை விமானநிலையத்தை 30 லட்சம் பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். ஆனால் அதற்கு முந்தைய 2 ஆண்டுகளில் நஷ்டத்தை கண்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக எல்லா துறைகளிலும் பாதிப்பு ஏற்பட்டதை போல கோவை விமான நிலையத்திலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 3 மாதங்கள் விமானங்கள் இயக்கப்படவில்லை.
 ஆனாலும் விமான நிலையத்தில் அனைத்து பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. பயணிகள் மட்டும் வரமாட்டார்கள்.

ஆனால் சரக்கு விமானங்கள் இயக்கப்பட்டதால் விமான நிலையத்தை வழக்கம் போல இயக்க வேண்டியிருந்தது. இதனால் வருமானம் இல்லாமல் விமான நிலையத்தை எப்போதும் போல பராமரித்ததால் செலவை குறைக்க முடியவில்லை. இதனால் கோவை விமான நிலையத் தின் வருமானம் 50 சதவீதம் குறைந்துள்ளது.

தற்போது விமானங்கள் முன்பு போல இயக்கப்பட்டாலும் கொரோனாவுக்கு முன்பு இருந்த பயணிகளின் எண்ணிக்கை தற்போது வரை அதிகரிக்கவில்லை. 

எனவே கொரோனா தாக்கம் குறைந்து முன்பு போல சர்வதேச விமான சேவை மற்றும் உள்நாட்டு சேவை முழு வீச்சில் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். அப்போது தான் கோவை விமான நிலையத்தின் வருமானம் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்