ஆண்டிப்பட்டியில் அரசியல் கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
ஆண்டிப்பட்டியில் அரசியல் கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்டிப்பட்டி:
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 31-ந்தேதி ஆண்டிப்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. துணைச்செயலாளர் அமரேசன் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2 கோடியே 17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரம் பகுதியில் வசிக்கும் அ.தி.மு.க. முன்னாள் தொகுதி செயலாளர் ஈஸ்வரி முருகன், தே.மு.தி.க நகர செயலாளர் பாலாஜி, தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகளான சக்கம்பட்டி தேங்காய் ராஜா, நாச்சியார்புரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேர் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பரபரப்பு
இந்த சோதனையில் பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? என அதிகாரிகளிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவர்கள் இதற்கு பதில் தெரிவிக்க மறுத்து விட்டனர். எனவே இந்த சோதனையில் பணம், ஆவணங்கள் சிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே ஆண்டிப்பட்டி மற்றும் கிராமப்புறங்களில் வருமான வரித்துறையினர் முகாமிட்டு வாகனங்களில் சென்று வருவதால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.