ஆண்டிப்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
ஆண்டிப்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.;
ஆண்டிப்பட்டி :
நிலக்கோட்டை அருகே உள்ள செக்காபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாருமதி (வயது 30). இவர் ஆண்டிப்பட்டியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு செல்வதற்காக, தேனியில் உள்ள உறவினரான பாரஸ்ட் ரோடு பகுதியை சேர்ந்த நீதிதேவன் (42) என்பவரின் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். குன்னூரை அடுத்துள்ள அரப்படிதேவன்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதனால் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் நீதிதேவன் மற்றும் சாருமதி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நீதிதேவனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சாருமதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ரெங்கசமுத்திரத்தை சேர்ந்த சுரேஷ் (30) மீது க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.