மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய திட்டம் கொண்டுவர நடவடிக்கை - காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வாக்குறுதி

மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் உறுதி அளித்துள்ளார்.

Update: 2021-04-02 18:30 GMT
கருங்கல், 

கிள்ளியூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். 

வேட்பாளர் ராஜேஷ்குமார் நேற்று தொலையாவட்டம் சந்திப்பில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். அவர் தொலையாவட்டம், வட்டக்கோட்டை, கம்பிளார் சிவன் கோவில், கிள்ளியூர், இலவுவிளை, ஆயினிவிளை, வெள்ளையம்பலம், மூன்று முக்கு, வேங்கோடு, மாதாபுரம், கல்வெட்டான்குழி பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பல்வேறு சாலைகள் எனது முயற்சியால் சீரமைக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளது. மேலும் பல சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளது.

இந்த தேர்தலில் மீண்டும் நான் வெற்றிபெற்றவுடன் தொகுதியில் தேன் உற்பத்தியை ஊக்கப்படுத்த தேன் ஆராய்ச்சி மையம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். 

தென்னை சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் தாலுகா நீதிமன்றம் அமைக்கப்படும். இயற்கை சீற்றத்தில் இருந்து கடற்கரை கிராமங்களை பாதுகாக்க நேர்கல், கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

குமரி மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இளைஞர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த பொது நூலகம் அமைக்கப்படும்.

பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வாரி சீரமைத்து ஆண்டு முழுவதும் தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர்களுக்கான ஓய்வூதியம், கணவரை இழந்த தாய்மார்களுக்கு மாத உதவித்தொகை போன்றவற்றின் தொகையை அதிகரித்து தகுதியானவர்களுக்கு உடனடியாக பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். 

ஏழை எளிய மக்களை பெரிதும் பாதிக்கும் என்.பி.எச். குறியீட்டை கொண்ட குடும்ப அட்டைகளை மாற்றி தகுதி உள்ள அனைவருக்கும், பி.எச்.எச். குறியீடுகள் கொண்ட குடும்ப அட்டையாக மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க சிறப்பு மையம் ஏற்படுத்தப்படும். 

குமரி மாவட்டத்தில் சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்படும் இடங்களில் கழிவு நீரோடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்யப்படும். கிள்ளியூர் தொகுதியில் வாழைக்காய் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து வெள்ளை ஈ ஒழிப்பு நடவடிக்கை குழு அமைக்கப்படும்.  பொதுமக்களின் வசதிக்கேற்ப 1000 குடும்ப அட்டைகளுக்கு மேலுள்ள ரேஷன் கடைகளில் உள்ள ரேஷன் கார்டுகளை பிரித்து தேவைப்படும் இடங்களில் கூடுதல் ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

நெய்யாறு இடதுகரை கால்வாயில் கோர்ட்டு உத்தரவுப்படி கேரள அரசிடம் பேசி தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தவும், தொகுதியில் புதிய வழித்தடத்தில் பஸ்கள் விடவும் நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும் வாழை விவசாயிகளுக்கு குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமல்லாமல் வேளாண் அலுவலக கிளையும் அமைய முயற்சிகள் மேற்கொள்வேன். இதுதவிர தொகுதியில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் குமரி மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
தொகுதியில் உள்ள இளைஞர்கள் சிறந்து விளங்க வசதியாக உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். 

மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் பதவி காலம் முடிந்த பிறகு அவர்களுக்கு எந்தவொரு பணப்பலனும் கிடைப்பது இல்லை. எனவே அண்டை மாநிலமான கேரளாவை போன்று தமிழகத்திலும் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பதவி காலம் முடிந்த பிறகு பயன்பெறும் வகையில் ஓய்வூதிய திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

கிள்ளியூரில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, தமிழ்நாட்டில் முன்மாதிரி தொகுதியாக கிள்ளியூரை மாற்ற நடவடிக்கை எடுப்பேன். 
பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தவும், வேலை வாய்ப்புகள் பெருகிடவும் நீங்கள் அனைவரும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரான எனக்கு கை சின்னத்திலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளரான விஜய் வசந்துக்கு கை சின்னத்திலும் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசார பயணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் உடனிருந்து ஆதரவு திரட்டினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர், மாவட்ட நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள், காங்கிரஸ் செயல்வீரர்கள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள், வியாபாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்