தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் தேனி பிரசாரத்தில், சரத்குமார் பேச்சு
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று தேனியில் நடந்த பிரசாரத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசினார்.
தேனி:
மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி சார்பில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளராக பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதியில் பாண்டியராஜன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, பெரியகுளம், தேனி அல்லிநகரம் ஆகிய இடங்களில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது சரத்குமார் பேசியதாவது:-
தமிழகத்தில் கடந்த 53 ஆண்டுகளை கடந்து 2 திராவிட இயக்கங்கள் ஆட்சி செய்து வருகின்றன. ஆடம்பர திட்டங்களை அறிவிக்கிறார்களே தவிர, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யவில்லை. ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். இது, நல்லவர்கள், வல்லவர்கள், படித்தவர்கள், பண்புள்ளவர்கள், உழைப்பால் உயர்ந்தவர்கள் இணைந்து உருவாக்கிய கூட்டணி.
மாற்றத்தை விரும்புகிறார்கள்
25 ஆண்டுகளுக்கு முன்பே நான் மக்களை சந்தித்து வருபவன். அப்போதே அ.தி.மு.க. ஆட்சியை எதிர்த்து 40 நாட்கள் பிரசாரம் செய்தேன். நான் நினைத்து இருந்தால் அப்போதே கட்சி தொடங்கி 40 சீட் கொடுங்கள் என்று கேட்டு இருப்பேன். அந்த சுயநலம் எனக்கு கிடையாது. இரு திராவிட இயக்கங்களுடனும் பயணித்தவன் நான். இந்த இரு திராவிட இயக்கங்கள் இல்லாத ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என்ற தேர்தலில் சிறந்த கூட்டணியை அமைத்துள்ளோம்.
தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறேன். தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். எங்கள் கூட்டணி ஆட்சியில் என்ன செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ளோம். எங்களின் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இருக்கும்.
தமிழகத்தின் கடன் சுமையை எப்படி தீர்ப்பது? என்பதே எங்களின் முதல் எண்ணம். படித்த இளைஞர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்துக்குள் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுப்போம். எனவே, எங்கள் கூட்டணிக்கு பெருவாரியான ஆதரவை அளித்து தமிழகத்தில் மாற்றம் நிகழ ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.