வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்காக கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை தயார் செய்யும் பணி தீவிரம் கலெக்டர் ஆய்வு
தேனி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்காக கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
தேனி:
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இந்நிலையில் உலக நாடுகள் மற்றும் இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் 2-வது அலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தலின் போது கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 51 சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சுகாதார ஆய்வாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-
கொரோனா நோய்த் தொற்றை தடுக்கும் பொருட்டு அதற்கான பாதுகாப்பு உபகரணங்கள் வீரபாண்டி துணை செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்காக 11 வகையான கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை அட்டைப் பெட்டிகளில் பிரித்து வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கலெக்டர் ஆய்வு
சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் கொரோனா நோய்த்தடுப்பு உபகரணங்களை தங்களுக்குரிய வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சேர்க்கவும், வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தல் மையங்களில் உள்ள மருத்துவ கழிவுகளை அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். சுகாதார ஆய்வாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை கொண்டு சென்று, வாக்காளர்கள் பாதுகாப்பான முறையில் வாக்களிப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். சுகாதார பணிகளை முறையாக செய்து, தேர்தல் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தை தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள வீரபாண்டி துணை செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்துக்கு கலெக்டர் சென்றார். அங்கு பொருட்களை அட்டைப்பெட்டிகளில் அடுக்கி வைத்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்க தயார் செய்யும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.