சோமரசம்பேட்டை,
ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டி வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். அப்போது அவர் கூறுகையில், தான் வெற்றி பெற்றதும் ஸ்ரீரங்கம் தொகுதியை தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன். படித்த இளைஞர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்பினை உருவாக்குவேன், தொகுதி மேம்பாட்டிற்கு பாடுபடுவேன். நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும். சிறப்பு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும்.
ஸ்ரீரங்கத்தில் பஸ் நிலையம், பக்தர்கள் தங்கும்இடம் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். வீடு இல்லாதவர்களுக்கு காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும். தமிழ்நாட்டு மக்கள் அடுத்த முதல்-அமைச்சர் ஸ்டாலின்தான் என முடிவெடுத்துள்ளனர். தி.மு.க. வெற்றி பெறும்போதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லதொரு விடிவு காலம் வரும். ஸ்டாலின் அறிவித்துள்ள பல நல்ல திட்டங்களையும், தொகுதி மக்களுக்கு முழுமையாக நிறைவேற்றுவேன்.
திருவானைக்காவல், கொண்டையம்பேட்டை, மாம்பழச்சாலை, அம்மா மண்டபம், மேலூர், சித்திரை வீதி, அடையவளஞ்சான் வீதிகள், சிங்கபெருமாள்கோவில், ராகவேந்திரா நகர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவருடன் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார், ஸ்ரீரங்கம் தலைமை செயற்குழு உறுப்பினர் செவந்திலிங்கம், பெரியசாமி, விமல், விஜயபாரதி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.