முசிறி தொகுதியில் புதிய திட்டங்கள் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் காவிரி குடிநீர் - அ.தி.மு.க. வேட்பாளர் எம்.செல்வராசு பேச்சு
முசிறி தொகுதியில் புதிய திட்டங்கள் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் காவிரி குடிநீர் கிடைக்கும் என அ.தி.மு.க. வேட்பாளர் எம்.செல்வராசு பேசினார்.
முசிறி,
முசிறி சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடும் அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் எம்.செல்வராசு எம்.எல்.ஏ. முசிறி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்திய பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், முதல்-அமைச்சர் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துகூறியும் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில்,
முசிறி தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடும் எனக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். கடந்த 5 ஆண்டுகளில் முசிறி தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்கும் வகையில் புதிய திட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கிராமங்கள்தோறும் அடிப்படை வசதிகள், சாலை வசதிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, வரத்து வாய்க்கால்கள் தூர்வாரியும், புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
தொட்டியத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கவும், புதிய அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைக்கவும், முசிறி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தி பாதாள சாக்கடை திட்டம் செய்து கொடுக்கவும், முசிறியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கவும், சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளேன்.
கொல்லிமலை புளியஞ்சோலை உபரிநீர் மகாதேவி ஏரிக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காவிரி ஆற்றிலிருந்து வாய்க்கால் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். வாழை, வெற்றிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். முசிறி தொகுதியில் போட்டியிடும் எனக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து முசிறி தொகுதி மக்களின் வளர்ச்சிக்கு பாடுபட மீண்டும் ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் என்று பேசினார்.
பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, ப.அண்ணாவி, முன்னாள் எம்.எல்.ஏ ரத்தினவேல், ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.