திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் - வெல்லமண்டி நடராஜனுக்காக ஜெயலலிதா வேடமணிந்து பேத்தி பிரசாரம்
திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெல்லமண்டி நடராஜனுக்காக ஜெயலலிதா வேடமணிந்து பேத்தி பிரசாரம் செய்தார்.
மலைக்கோட்டை,
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், மாநகர் மாவட்டச் செயலாளருமான அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று காலை 18-வது வார்டு பகுதியில் உள்ள குஜிலி தெரு, சின்ன செட்டித்தெரு, பெரிய செட்டித்தெரு, கம்மாள தெரு, வளையல்காரத்தெரு, பூண்டு கடைத்தெரு, பெரிய கடை வீதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று இரட்டை சிலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மாலையில் 21-வது வார்டுக்குட்பட்ட வரகனேரி, பெரியார் நகர், பிள்ளையார் கோவில் தெரு, அக்ரஹாரம் முதல் தெரு, அந்தோணியார் கோவில் தெரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
காலையில் பிரசாரத்தை தொடங்கியபோது ஜெயலலிதா போல சிறுமி ஒருவரும் வேட்பாளர் வெல்லமண்டி நடராஜனுடன் பிரசாரத்தில் கலந்து கொண்டார். அப்போது அந்த சிறுமி மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று ஜெயலலிதா பாணியில் பேசி, இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க...என்று வாக்காளர்களை கேட்டுக் கொண்டார். அந்த சிறுமி வேறும் யாரும் அல்ல... அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் பேத்தியும், வெல்லமண்டி ஜவகர்லால் நேருவின் மகளுமான சாய்மித்ரா தான். தனது தாத்தா வெல்லமண்டி நடராஜனுக்கு ஆதரவாக நேற்று பிரசாரத்திற்கு வந்த சாய்மித்ரா எந்தவித பயமுமின்றி மிகவும் சாதாரணமாக பேசி அனைவரையும் கவர்ந்தார்.
மேற்கண்ட பிரசாரத்தின்போது அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன், பொருளாளர் மனோகரன், ஆவின் தலைவர் கார்த்திகேயன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர் சீனிவாசன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குப்தா, அன்பழகன், பீடி-தீப்பெட்டி பிரிவு மாநில செயலாளர் சகாபுதீன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், வெல்லமண்டி ஜவகர்லால்நேரு, வட்ட செயலாளர்கள் தியாகராஜன், தங்கராசு, பாசறை செயலாளர் இலியாஸ், துணை செயலாளர் ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் வழக்கறிஞர் அணி சுரேஷ், காசிபாளையம் சுரேஷ், எஸ்.பி.கார்த்திகேயன், ரோஜா், விஜயகுமார், பொன்ராஜ், கண்ணன், சதீஷ், கே.டி.தனபால், சசி குமார், சந்தோஷ், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அ.தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.