கார்-சரக்கு வாகனம் மோதல் ; 13 பேர் காயம்
கார்சரக்கு வாகனம் மோதல் 13 பேர் காயம்
தாராபுரம்,
தாராபுரம் காமராஜபுரத்தில் இருந்து உப்பாறு அணை பகுதிக்கு 15 கூலி தொழிலாளர்கள் வெங்காயம் அறுவடை செய்ய சரக்கு வாகனம் ஒன்றில் சென்றனர். அந்த வாகனத்தை குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மாயவன் ஓட்டி சென்றார். அந்த வேன் தாராபுரம் பைபாஸ் ரோட்டில் பூளவாடி பிரிவு அருகே சென்று கொண்டு இருந்தது.
அப்போது கோவையில் இருந்து தாராபுரம் நோக்கி கார் ஒன்று வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கார் சரக்கு வாகனம் மீது மோதியது. அதில் சரக்கு வாகனம் அப்படியே ரோட்டில் கவிழ்ந்தது. அதில் டிரைவர் மாயவன் மற்றும் காமராஜபுரத்தை சேர்ந்த வள்ளியாத்தாள்(38), பாப்பாத்தி (40), வெள்ளையம்மாள் (54), மாரியாத்தாள் (50), ரங்கம்மாள் பிச்சையாத்தாள் (60), முருகாத்தாள் (50),விஜயா(60),கண்ணம்மாள்(55) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரையும் மீட்ட போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதுபோல் விபத்துக்குள்ளான காரில் இருந்த கோவையை சேர்ந்த பெருமாள் மகன் கிருஷ்ணகுமார் (29) மற்றும் கோவை மத்தக்காளிபாளையம் பகுதியை சேர்ந்த சென்னியப்பன் மனைவி சிவகாமி (57)அவரது மகள் ரம்யா (30) ஆகியோரையும் மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவர்களில் கிருஷ்ணகுமார் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதுபோன்று வெள்ளையம்மாள், பாப்பாத்தி ஆகியோரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.