முசிறி தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும் தி.மு.க. வேட்பாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் வாக்குறுதி
முசிறி பகுதியில் தி.மு.க வேட்பாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
முசிறி,
முசிறி சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். முசிறி, தொட்டியம், தா.பேட்டை, காட்டுப்புத்தூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணிக்கட்சி தோழர்கள் ஆகியோருடன் வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் சென்று தொகுதி மேம்பாட்டிற்கு தேவையான திட்டங்கள் குறித்து வாக்குறுதி அளித்து தீவிர வாக்குகள் சேகரித்து வருகிறார். முசிறி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் பேசும்போது, முசிறி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி அனைத்து சிகிச்சைகளும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். முசிறி தொகுதியில் உள்ள அரசுபள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். கல்வி வளர்ச்சியிலும், சுகாதாரத்திலும் முசிறி தொகுதியை மேம்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்வேன். சட்டமன்ற தேர்தலில் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யும் சமயத்தில் உங்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றி தர பாடுபடுவேன்.
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்து மக்களுக்கும் கிடைத்திட முன்னின்று பணியாற்றுவேன் என்று பேசினார். பிரசாரத்தின்போது வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், கட்சியினர் பொன்னாடை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் வரவேற்பு அளித்தனர். அப்போது ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், கே.கே.ஆர்.சேகரன், மாநில நிர்வாகிகள் கோட்டூர் முருகேசன், ஆப்பிள் கணேசன், மயில்வாகனன், நகர செயலாளர்கள் சிவகுமார், தக்காளி தங்கராசு, சவுந்தரராஜன், நிர்வாகிகள் சிட்டி லரை சிவா, நல்லுசாமி, வீரவிஜயன், கலைச்செல்வன், பார்த்திபன், சுரேஷ், நல்லேந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.