திருச்சி மேற்கு தொகுதியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு உறுதி
உறையூர், ஜங்ஷன், கருமண்டபம், எடமலைப்பட்டிபுதூர் உள்பட அனைத்து இடங்களிலும் தி.மு.க.வின் திட்டங்கள் மற்றும் செய்த சாதனைகளை எடுத்துக்கூறி கே.என்.நேரு வாக்கு சேகரித்தார்.
திருச்சி,
திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு தொகுதி முழுவதும் வீதி,வீதியாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் தில்லை நகர், உறையூர், ஜங்ஷன், கருமண்டபம், எடமலைப்பட்டிபுதூர் உள்பட அனைத்து இடங்களிலும் தி.மு.க.வின் திட்டங்கள் மற்றும் செய்த சாதனைகளை எடுத்துக்கூறி கே.என்.நேரு வாக்கு சேகரித்தார். சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் வேட்பாளர் கே.என்.நேரு பேசுகையில், சாலை விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள உறையூர் சத்யா நகர் மக்களுக்கு வேறு இடத்தில் வீடு கட்டித் தரப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. வெற்றி பெற்ற இடங்களில் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அ.தி.மு.க. உங்களை புறக்கணிக்கிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் கிடப்பில் போடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் உடனடியாக நிறைவேற்றப்படும்.
உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 100 சதவீதம் வெற்றி பெற்றதை போல திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும். கொசு உற்பத்தி மையமாக இருக்கும் உய்யகொண்டான் வாய்க்காலை தூர் வாரி சுத்தப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேற்கு தொகுதிக்கு வரும் தண்ணீரை கிழக்குப் பகுதிகளுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் மாற்றி வழங்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மேற்கு தொகுதிக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
முன்னதாக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தஞ்சை மண்டல சி.எஸ்.ஐ. பேராயர் சந்திரசேகரன் மற்றும் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட குருமார்கள், கல்லூரி முதல்வர் பால் தயாபரன் மற்றும் பேராசிரியர்களை சந்தித்தார். அப்போது மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.