காவிரி நீரை கொண்டு வந்து வேடசந்தூர் தொகுதியை வளப்படுத்துவதே முதல் பணி தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன் சபதம்

காவிரி நீரை வாய்க்காலில் கொண்டு வந்து வேடசந்தூர் தொகுதியை வளப்படுத்துவதே எனது முதல் பணி என்று குஜிலியம்பாறை ஒன்றிய பகுதிகளில் மேற்கொண்ட பிரசாரத்தில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன் பேசினார்.

Update: 2021-04-02 06:10 GMT
குஜிலியம்பாறை, 

வேடசந்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் பொதுமக்களிடையே பேசியதாவது:-

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி முடிந்திடவும், நல்லாட்சி மலர்ந்திடவும் வருகிற தேர்தலில் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் உதயசூரியன். ஏனென்றால் கடந்த தி.மு.க ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களை தி.மு.க. சிறப்பாக செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே தற்போதும் எண்ணற்ற திட்டங்களை தேர்தல் அறிக்கையாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

நமது தொகுதியில் நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது பல திட்டங்களை கொண்டு வந்தேன். குறிப்பாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை வேடசந்தூர் தொகுதிக்கு கொண்டு வந்ததன் மூலம் குடிநீர் பிரச்சினையை தீர்வுக்கு கொண்டு வந்துள்ளேன். ஆகவே நான் மீண்டும் எம்.எல்.ஏ.வானால் விடுபட்ட பகுதிகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்துவேன். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாயனூர் அணையில் இருந்து காவிரி நீரை வாய்க்கால் மூலம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். 
எப்படியும் இத்திட்டத்தை செயல்படுத்தி நம் தொகுதியை வளப்படுத்தி காட்டுவேன். இதுவே என் முதல் பணி. இதை நான் எனது சபதமாக எடுத்துக் கொள்கிறேன். இதற்கு வாக்காளர்களாகிய நீங்கள் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

பிரசார நிகழ்ச்சியில் குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் சு.சீனிவாசன், பேரூர் செயலாளர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல், ஒன்றிய துணைச்செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி சவுந்தர் மாரியப்பன், வேடசந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், பொருளாளர் சிவபெருமாள், மாவட்ட பொறியாளர் அணி இளங்கோ, ஆர்.கோம்பை ஊராட்சி செயலாளர் முத்துசாமி, தெற்கு ஊராட்சி செயலாளர் காமராஜ், உல்லியகோட்டை பொன்சுப்பிரமணியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜ்குமார், தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் கார்த்தி, ஒன்றிய தகவல் ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம், வடுகம்பாடி கார்த்தி மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்