மக்களுக்கு சிறப்பான திட்டங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

மக்களுக்கு சிறப்பான திட்டங்களை செயல்படுத்த இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2021-04-02 05:44 GMT
கரூர்,

கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் நேற்று கரூர் தொகுதிக்கு உட்பட்ட திருப்பதி லே அவுட், லட்சுமிபுரம், பசுபதி லேஅவுட், திரு.வி.க. ரோடு, காந்திசாலை கிழக்கு உள்பட பல்வேறு இடங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியதாவது:- பல போராட்டங்கள், புயல், வெள்ளம் ஆகியவற்றை சமாளித்து சிறந்த முறையில் தமிழகத்தை வழிநடத்தி வருகிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து மக்களை சந்திக்கும் போது எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இருக்கிறது என்றால் அந்த அரசு மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்திய அரசாகதான் இருக்கும். தாலிக்கு தங்கம், மாணவ, மாணவிகளுக்கு லேப்-டாப், கிராம பகுதிகளில் ஆடு, மாடு வழங்கியுள்ளோம். 

கரூர் மாவட்டத்தில் ஆண்டிற்கு 2 ஆயிரம் பேருக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. கரூர் மக்களுக்கு தினமும் காவிரி குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அம்மா சாலை திட்டம், குகைவழிப்பாதை திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். தற்போது பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை, வருடத்திற்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென உங்கள் பாதம்தொட்டு கேட்டுக்கொள்கிறேன். 
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்