முன்மாதிரி தொகுதியாக போடி திகழ்கிறது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

முன்மாதிரி தொகுதியாக போடி திகழ்கிறது என்றும், உங்களில் ஒருவனாக இருந்து சேவையாற்ற மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

Update: 2021-04-02 04:49 GMT
தேனி, 

தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் மாலையில் போடி நகரில் வீதி, வீதியாக அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். இரவு 10 மணி வரை வீதி, வீதியாக பிரசார ஜீப்பில் பயணித்தும், சில தெருக்களில் நடந்து சென்றும் வாக்குசேகரித்தார்.
இந்த பிரசாரத்தின் போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

போடி சட்டமன்ற தொகுதியில் என்னை 2 முறை எம்.எல்.ஏ.வாக மக்கள் தேர்வு செய்தார்கள். மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ளேன். கடந்த 10 ஆண்டு கால கட்டத்தில் போடி சட்டமன்ற தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசு பொறியியல் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு சட்டக்கல்லூரி, அரசு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. போன்றவை தொடங்கப்பட்டு உள்ளது. கால்நடை வளர்ப்பு தொழிலில் விவசாயிகள் பலர் ஈடுபட்டு உள்ளதால் தப்புக்குண்டுவில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 18-ம் கால்வாய் நீட்டிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. போடி தொகுதி முன்மாதிரி தொகுதியாக திகழ்கிறது. மேலும், பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அந்த பணிகளும் தொடங்கி நடைபெறும். உங்களில் ஒருவனாக இருந்து சேவையாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

அதுபோல், தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத் மேலசொக்கநாதபுரம், மீனாட்சிபுரம், கோவிந்தநகரம், ஸ்ரீரெங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பூத்கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். இந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், போடி நகரில் துணை முதல்-அமைச்சரின் மருமகள் ஆனந்தி ரவீந்திரநாத் மற்றும் அ.தி.மு.க. மகளிர் அணியினரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். வீடு, வீடாக சென்று வாக்குசேகரித்த அவர்கள், போடியில் மகளிர் சுயஉதவிக்குழுவினரையும் சந்தித்து ஆதரவு திரட்டினர். இந்த நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. போடி நகர செயலாளர் பழனிராஜ், ஒன்றிய செயலாளர் சற்குணம், அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்