விராலிமலை தொகுதியில் 1,000 ஏழை மாணவர்களுக்கு விரும்பிய கல்லூரியில் இலவச கல்வி அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குறுதி
விராலிமலை தொகுதியில் 1,000 ஏழை மாணவர்களுக்கு விரும்பிய கல்லூரியில் இலவச கல்வி வழங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
ஆவூர்,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தை சேர்ந்த அந்தங்குடிபட்டி, ஆவாரம்பட்டி, பீம்பட்டி மருதம்பட்டி, இலுப்பக்குடிபட்டி, சிறுமங்கலமப்பட்டி, பெருங்குடிப்பட்டி, கண்ணாம்பட்டி மற்றும் அன்னவாசல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
உங்களது 100 ஆண்டுகால கனவு திட்டமான காவிரி- வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது. தற்போது கண்ணீரோடு வாக்கு கேட்டு வரும் எதிர்க்கட்சிகள் தேர்தலுக்குப்பின் உங்களுக்கு கண்ணீரை வர வைத்து விடுவார்கள்.
இப்போது கால்களில் விழுந்து ஓட்டு கேட்கும் அவர்கள் பின்னால் உங்களது காலை வாரி விடுவார்கள். 12 வருடங்களுக்கு முன்பு எனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளேன் அதனால் தான் கூறுகிறேன். நான் உங்களுக்கு எதையும் கொடுப்பேன். என்னையும் கொடுப்பேன்.
விராலிமலை தொகுதி மக்களுக்காக ஐம்பெரும் திட்டங்களைத் தீட்டி அவற்றை செயல்படுத்த உள்ளேன். அதில் ஆண்டுதோறும் தொகுதியில் உள்ள 1,000 ஏழை-எளிய மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் அவர்கள் விரும்பிய கல்லூரியில் இலவச கல்வி வழங்கப்படும். ஜூன் மாதத்தில் ஒரே வாரத்தில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, மதியநல்லூர், ஆவூர் அருகே மலம்பட்டி, குளத்தூர் ஆகிய இடங்களில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு அதில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், வீட்டுக்கு அருகில் மரம் வளர்த்தால் வீடு தேடிவரும் பரிசு, வீரம் விளையும் விராலிமலையில் 10 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு காளை பராமரிப்பு நிலையம் ஆகியவை அமைக்கப்படும்.ஆகவே தமிழகத்தில் நல்லாட்சி தொடர நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.